Monday, September 20, 2004

இந்திய எடூசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது..!



இந்திய கல்விசார் செயற்கைக் கோளைக் காவிச் சென்ற உந்துவாகனம்..!


தொலைத்தொடர்பு, தொலை உணர்தல், வானியல் ஆய்வு ஆகியவற்றிற்கு தனித்தனியாக செயற்கைக்கோள்களை செலுத்தி சாதனை படைத்த இந்தியா, இன்று கல்வி மேம்பாட்டிற்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது....!
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண் மையத்தில் இருந்து இன்று மாலை 4.01 மணிக்கு புறப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. விண்கலம், 17 நிமிட பயணத்திற்குப் பின் 180 கி.மீ. உயரம் சென்று 1,950 கி.கி. எடையுள்ள எடூசாட் (Education Satellite) செயற்கைக்கோளை புவி சுழற்சிப் பாதையில் துல்லியமாக செலுத்தியது. 49 மீ. நீளமும், 414 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் திட்டமிட்டபடி சரியாக 16.01 மணிக்கு நெருப்பை கக்கிக்கொண்டு விண்ணை நோக்கிப் பறந்தது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணம் மேற்கொண்ட ஜி.எஸ்.எல்.வி., புவியிலிருந்து 180 கி.மீ. தூரத்தை எட்டியதும் அதன் முன்பகுதி திறந்துகொள்ள அங்கிருந்த செயற்கைக்கோள் புவிசுழற்சிப் பாதையில் செலுத்தப்பட்டது.

எடூசாட் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதும் சத்தீஷ்தவான் விண் மையத்தில் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் தலைவர் மாதவன் நாயர், செயற்கைக்கோள் துல்லியமாக செலுத்தப்பட்டதாக அறிவித்தார். இப்பணியில் ஈடுபட்ட பல்வேறு குழுக்களின் தலைமை விஞ்ஞானிகள், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜி.எஸ்.எல்.வி.
விண்கலம் தனது பணியை சிறப்பாக செய்து ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினர். எடூசாட் செயற்கைக்கோளில் உள்ள சூரிய சக்தியை வாங்கி செயற்கைக்கோளிற்கு தேவையான சக்தியை அளிக்கும் பேனல்கள் எதிர்பாத்தபடி விரிந்துள்ளதாகவும், செயற்கைக்கோள் நன்றாக இயங்கத் துவங்கியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ஏவுதலின் வாயிலாக 2 டன் எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்பும் திறனில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளதென விஞ்ஞானிகள் கூறினர்.

தற்பொழுது பூமியின் குறைந்தபட்ச சுழற்சிப் பாதையில் (பெரீஜி), அதாவது 180 கி.மீ. தூரத்தில் செலுத்தப்பட்டுள்ள எடூசாட், அடுத்த 3 நாட்களில் அதிலுள்ள பூஸ்டர் இயந்திரம் இயக்கப்பட்டு அதிகபட்ச சுழற்சிப் பாதையான (அப்போஜி) 36,000 கி.மீ. தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிலை நிறுத்தப்படும். அதன்பிறகு அதிலுள்ள டிரான்ஸ்பாண்டர்கள் இயங்கத் துவங்கி கல்வி பணிக்காக பயன்படுத்தப்படும்.

For more details in English

Thanks webulagam.com & bbc.com

பதிந்தது <-குருவிகள்-> at 10:18 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க