Sunday, September 17, 2006

ஊதிப் பெருத்த கோளும் புரியாத விடயங்களும்



விண்ணியலாளர்கள் 450 ஒளியாண்டுகளுக்கு அப்பால் சோடி நட்சத்திரங்களில் ஒன்றை வலம் வந்து கொண்டிருக்கும் பொருமிப் பெருத்த கோள் என்று கருதக் கூடிய விண்பொருள் ஒன்றை அவதானித்துள்ளனர். இதற்கு HAT-P-1 என்ற குறியீட்டுப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த HAT-P-1 இன் ஆரை கிட்டத்தட்ட வியாழக் கிரகத்தின் ஆரையைப் போல 1.38 மடங்குகள் இருக்கும் அதேவேளை அதன் திணிவு வியாழனின் திணிவைப் (வியாழனின் திணிவு 1.8987 × 10^27 கிலோகிராம்) போன்று வெறும் அரைப்பங்கு தானாம் இருக்கும் என்று அணுமானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இவ்விண்ணியற் பொருளின் சராசரி அடர்த்தி என்பது சாதாரண கோள்களின் அடர்த்தியிலின்றும் மிகக் குறைந்திருப்பதுடன் இவற்றின் அடிப்படையில் இதன் தோற்றம் குறித்தும் பாரிய சந்தேகத்தைக் கிளப்பி உள்ளது.

இதன் சராசரி அடர்த்தி குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள் இதன் அடர்த்தி நீரின் (1000 கிலோகிராம்/கன மீற்றர்கள்) அடர்த்தியின் 1/4 பங்கு தான் என்றும் இவ்விண் பொருளின் (கோள் என்று கருத்ததக்க) பெளதீகத் தன்மைகள் குறித்து விளக்கவல்ல கணிப்பீடுகளை வழமையான கணிதச் சமன்பாடுகளைக் கொண்டு தீர்க்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இது தான் சுற்றி வரும் தாய் நட்சத்திரத்தை மிக அண்மித்த சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் அதேவேளை 4.5 பூமி நாட்களுக்குள் இது ஒரு தடவை அதன் சுற்றுப்பாதையில் முழுமையாகப் பயணித்தும் விடுகிறதாம். இது அதன் தாய் நட்சத்திரத்தைக் கடக்கும் போது தாய் நட்சத்திரம் மக்கலாகத் தோன்றுகின்றதாம்.

இந்த HAT-P-1 விண் பொருள் சூரியத் தொகுதிக்கு அப்பால் அவதானிக்கப்பட்ட கோள்கள் என்று கருதத்தக்க சுமார் 200 விண் பொருட்களில் ஒன்று என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்ட சூரியக் குடும்பத்துக்கு வெளியில் உள்ள இதே வகைக் கோளான HD 209458b இன் பொருமிப் பெருத்த அளவையும் விட இதன் பொருமல் 24% எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்தக் கோளின் பெளதீகத் தன்மைகள் குறித்து விளக்க பல வழிமுறைகள் முன்மொழியப்பட்ட போதும் அவை எதுவும் இதுவரை சரியாக அமையவில்லை என்றும் மேலும் ஆய்வுகள் தொடர்வதாகவும் இவ்வாய்வை நடத்தி வரும் ஆய்வு மையம் - Harvard-Smithsonian Center for Astrophysics (CfA)- விண்ணியல் சஞ்சிகை ஒன்றின் மூலம் அறியத்தந்துள்ளது.

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 2:09 am

1 மறுமொழிகள்:

Blogger kuruvikal விளம்பியவை...

தொழில்நுட்பப் பிரச்சனையால் தள வடிவமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பரீட்சார்த்தப் பதிவு.

உங்கள் கருத்துக்களையும் பகருங்கள்.

நன்றி.

Sun Sept 17, 09:44:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க