Monday, December 11, 2006

பெண்கள் குழந்தைகள் இன்னும் அவலத்தில்.



உலகெங்கும் குறிப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஆண் பெண் நிலைகளுக்கிடையிலான சமூகச் சம உரிமையின்மையாலும் பெண்கள் குடும்பங்களில் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருந்து புறக்கணிப்படுவதாலும் அது குடும்பத்தில் பெண்களினதும் பிள்ளைகளினதும் நிலைகளைப் பல வகையிலும் பாதித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம்(யுனிசெவ்-UNICEF) தனது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

உலகில் தெற்காசிய நாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே பெண்களுக்கு சம பேச்சு உரிமை இருந்தால் சுமார் 13 மில்லியனுக்கும் குறைவான சிறுவர்கள் போசாக்குக் குறைவால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இது வழமையையான எண்ணிக்கையை விட விட 13% குறைவானதாக அமையும்.

அந்த வகையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான சமூக உரிமை என்பதும் கருத்து வெளியிடும் உரிமை என்பதும் சமனாகவும் மதிப்புள்ளதாகவும் இருக்கும் நிலையானது அவசியமென்றும் அதுவே பெண்களினதும் குழந்தைகளினதும் நிலையைப் பலப்படுத்தும் என்றும் யுனிசெவ் பரிந்துரைக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெண்களுக்கு கல்வியில் வேலை வாய்ப்பில் இன்னும் சரியான இடமளிக்கப்படாமை அல்லது பாரபட்சம் காட்டப்படுதல் போன்ற காரணிகள் பெண்களின் வருமானத்தைப் பாதிப்பதுடன் குடும்பங்களில் அவர்களினதும் பிள்ளைகளினதும் போசாக்கு மற்றும் திறன்களையும் பாதிக்கச் செய்கின்றன.

வளர்ந்து வரும் நாடுகளில் குடும்பத்தில் பெண்கள் தொடர்பான சுகாதாரத் தீர்மானங்களுக்கு முக்கியமளிக்கப்படுவதில்லை என்றும் அது பெண்களையும் குழந்தைகளையும் பாதிக்கின்ற நிலைக்கே இட்டுச் செல்கின்றன என்றும் யுனிசெவ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

பெண்கள் தாங்கள் பெறும் மேலதிக வருமானத்தில் கூட குறிப்பிடத்தக்க அளவை குடும்பத்தின் உணவுத் தேவைக்காகப் பயன்படுத்தும் அதேவேளை ஆண்களின் வருமான அதிகரிப்பானது அப்படி ஒன்றும் பெரிய மாற்றத்தை காண்பிக்கவில்லை என்றும் யுனிசெவ் ஆண்கள் மீது குறைப்பட்டுக் கொள்கிறது.



தெற்காசிய உள்ளிட்ட வளரும் நாடுகளில் பெண்கள் ஆண்களை விட அதிக நேரம் உழைப்பவர்களாகவும் வீட்டுப்பணிகளைக் கவனிப்பவர்களாவும் இருக்கும் அதேவேளை தாய் வேலை செய்பவராக இருந்தால் பிள்ளைகள் பாடசாலையில் இருந்து நிறுத்தப்பட்டு குடும்பப் பணிகள் செய்ய நிர்பந்திக்கப்படுவதாகவும் யுனிசெவ் மேலும் குறைபட்டுக் கொள்கிறது.

பெண்களின் வருமான அதிகரிப்பும் குடும்பத்தில் அவர்களுக்குள்ள தீர்மானம் எடுக்கும் சக்தியும் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பும் சுகாதாரமும், குடும்பத்தில் ஆண்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும்,ஆண்-பெண் உரிமைகளுக்கு சம வாய்ப்பளிப்பதும் அதிகரிக்கின்ற போது வளமான குழந்தைகளும் சமூகமும் உதிக்கும் என்று யுனிசெவ் பரிந்துரைக்கிறது.

2007 இல் பெண்களும் குழந்தைகளும்...யுனிசெவ் அறிக்கைக்கு இந்த இணைப்பை அழுத்துங்கள்..!

மேலதிக தகவல் இங்கு

பதிந்தது <-குருவிகள்-> at 7:50 am

2 மறுமொழிகள்:

Blogger மங்கை விளம்பியவை...

அருமையான பதிவு..தெளிவா சொல்லியிருக்கீங்க

வீட்டு வேலை மற்றும் ஆபீஸ் வேலை என்று இரட்டை வேடம் இடவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள் பல தடைகளையும் கஷ்டங்களையும் மீறி இன்று முன்னேறிக் கொன்டிருந்தாலும், பல நேரங்களில் முடிவு எடுக்கும் உரிமை இல்லாமல் தான் போகிறது...

நல்ல பதிவு..

Mon Dec 11, 09:08:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றிகளுடன்...யுனிசெப்பின் அறிக்கை தெற்காசியப் பிராந்தியத்துக்கு முக்கியமளித்துள்ளதை அப்பிராந்திய நாடுகளின் அரசுகள் அதிக கவனம் கொடுத்துக் கவனித்து இப்பிரச்சனைகளின் தோற்றுவாய்களை களைய வேண்டும். பெண்களின் குழந்தைகளின் நலனிலும் உரிமையிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

Wed Dec 13, 08:13:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க