Thursday, October 25, 2007

சந்திரனின் சுற்றுப்பாதை நோக்கி சீன விண்கலம்.



நிலவின் சுற்றுப்பாதைக்கு சீனாவின் முதலாவது விண்கலம்

நிலவின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன விண்கலம் தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

சீனப்பெண் கடவுளான, சாங் பெயரை வைத்து 'சாங்-ஒன்று' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளற்ற விண்கலம், ஒராண்டு காலம் இந்தப் பணியில் ஈடுபடும்.

நிலவின் சுற்றுபாதையில் இன்னும் ஒரு வாரகாலத்தில் நுழையவிருக்கும் இந்த விண்கலம், நிலவின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து நவம்பர் மாத இறுதியில் பூமிக்கு அனுப்பும்.

ஆசியாவில் மிகவும் சுறுசுறுப்படைந்துவரும் விண்வெளிப்போட்டியில், சீனாவின் இந்த முயற்சி மிகச் சமீபத்திய ஒன்றாகும்.

கடந்த மாதம் ஜப்பான் தனது முதல் நிலவுச் சோதனைப் பயணத்தை தொடங்கியது. இந்தியாவும், நிலவின் சுற்றுப்பாதையில் அதன் விண்கலத்தை அடுத்த ஆண்டு செலுத்த திட்டமிட்டு வருகிறது.

அடுத்த 15 ஆண்டுகளூக்குள் நிலவில் மனிதனை அனுப்புவதுதான் சீனாவின் இறுதித் திட்டமாகும். இந்த மூன்று நாடுகளும் விண்வெளியில் இன்னும் பெரிய அளவு பிரசன்னத்துக்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் போட்டியிடுகின்றன.

----------------------------

ஆசியாவில் ஒரு புதிய விண்வெளிப் போட்டி

சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்கு செய்மதி ஒன்றை காவிச் செல்லும் திட்டத்துடன் இன்று சீனா ராக்கட் ஒன்றை வெற்றிகரமாக ஏவியுள்ளது.

சீனாவின், விண்வெளித் திட்டத்தில் தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சாதனை இது.

ஆனால், இது குறிப்பாக, ஆசியாவில் ஒரு புதிய விண்வெளிப் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவினால் மிகவும் உற்சாகத்துடன் உயர்த்தி ஒலிக்கப்படுகின்ற இந்த விண்வெளித்திட்டம், அரசியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் ஒரு செய்தியைக் காவி வருகிறது.

உலகிலேயே மூன்றாவது நாடாக, விண்வெளி வீரர்களை வான் வெளிக்கு சீனா, மூன்று வருடங்களுக்கு முன்னர் அனுப்பிய பொழுது, ஒட்டு மொத்த சீன தேசமே அதனைக் கொண்டாடியது.

அதேவேளை, ஆசியாவின் போட்டித் தேசியங்களிடையே இது ஒரு புதிய விண்வெளிப் போட்டிக்கும் வழி செய்துள்ளது.

சீனாவும், ஜப்பானும் ஒருவரை ஒருவர் மிகுந்த போட்டி கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள்.

ஜப்பான் தற்போதுதான் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் தனது முதலாவது செய்மதியைச் சுற்ற விட்டுள்ளது.

ஆனால், அடுத்த வருடம் அப்படியான செய்மதியை அனுப்பத் திட்டமிட்டுள்ள இந்தியா, 2015 இல் ஆட்களை காவிச் செல்லும் ராக்கட்டுகளை விண்வெளிக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நாடுகளைப் பொறுத்தவரை, இந்த விண்வெளித்திட்டம் அவசியமானதுதான்.

அத்துடன், 1960 களில் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் காணப்பட்ட விண்வெளிப்போட்டியின், முக்கிய சாயங்களான சித்தாந்த மற்றும் இராணுவ அம்சங்களைக் கூட இந்த நாடுகளின் திட்டங்கள் கொண்டிருக்கவில்லை என்பதும், இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால், இன்னமும் சில வட்டாரங்களில் இந்த திட்டங்கள் குறித்த பாதுகாப்பு அச்சங்கள் காணப்படத்தான் செய்கின்றன. அண்மையில் சீனா ஒரு செய்மதியை சுட்டு வீழ்த்தியதன் காரணமாக அமெரிக்காவிலும் இது காணப்படுகிறது.

அமெரிக்கவில் உள்ள சில நிபுணர்கள், விண்வெளித் திட்டங்களில் தான் வகித்துவரும் முன்னணி நிலையை, அமெரிக்கா இழக்கக் கூடிய ஆபத்து உள்ளது என்று வாதிடுகிறார்கள்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அமைப்பின் விண் ஓடம் 2010 ஆம் ஆண்டில் ஓய்வுபெறவுள்ளது. 2020 இல் மீண்டும் சந்திரனுக்கு ஆட்களை அனுப்பும் திட்டத்துக்காகவும், 2050 இல் செவ்வாய்க் கிரகத்துக்கு பயணிக்கும் திட்டத்துக்காகவும் நிதியைப் பெறுவதற்கு நாசா ஒரு கவலை கலந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறது.

ஆகவே நாசாதான், அமெரிக்கா, ''விண்வெளித்திட்டத்தில் தனது முன்னணி நிலையை இழக்கப் போகிறது'' என்ற கவலையைப் பிரச்சாரம் செய்கிறது என்று வேறு சில நிபுணர்கள் வாதிடுகிறார்கள்.

சீனாவோ, ஜப்பானோ நிலவுக்கு ஆட்களை அனுப்ப இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் பிடிக்கும் என்று கூறும் அவர்கள், அமெரிக்கா நிலவுக்கு ஆட்களை அனுப்பி அரை நூற்றாண்டுக்குப் பின்னர்தானே அது நடக்கவிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

bbc.tamil

பதிந்தது <-குருவிகள்-> at 12:15 am

2 மறுமொழிகள்:

Blogger வடுவூர் குமார் விளம்பியவை...

ஆமாம்,அங்கு போய் இப்போது என்ன செய்யப்போகிறார்கள்?
அணு ஆயுத கிடங்காக மாற்றப்போகிறார்களா? இல்லை பிளாட் போட்டு விற்கப்போகிறார்களா?
மார்ஸ் போவதற்கு Transit பாயிண்டா?

Thu Oct 25, 01:30:00 am BST  
Blogger kuruvikal விளம்பியவை...

நோக்கங்கள் பலவாகினும் பனிப்போரின் பின்னர் அமெரிக்காவின் ஏகபோக விண்வெளி ஆதிக்கத்துக்கு வலுவான போட்டி நிலை உருவாகி வருகின்றது என்பது முக்கியமான ஒன்று. அது பூமியில் நாடுகளின் இருப்பு பாதுகாப்பு என்று பல விடையங்களில் செல்வாக்குச் செய்யும் என்றும் எதிர்பார்க்கலாம்.

நன்றி வடுவூர் நீங்கள் இப்போ எமது வலைப்பதிவின் கஸ்ரமர் ஆகிட்டீங்க போல.

நன்றி உங்கள் போன்றோரின் ஆதரவே எழுத தூண்டுகிறது. தொடர்ந்து வாருங்கள் கருத்துக்களைப் பகருங்கள்.

Thu Oct 25, 10:35:00 am BST  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க