Sunday, June 22, 2008

ஒவ்வாமை பற்றிய மர்மம் கோழிகளால் விடுவிப்பு..!



மனிதர்களில் சில கூறுகளுக்கு எதிராக ஒவ்வாமை (allergy) ஏற்பட்டு அது மரணத்தில் முடிவதுண்டு. பலருக்கு சில கூறுகளை உண்டாலோ அல்லது சுவாசித்தாலோ ஒவ்வாமை சார்ந்த உடலுபாதைகள் (ஆஸ்மா அல்லது anaphylactic shock) ஏற்படுவது வழமை.

ஒவ்வாமை என்பது உண்மையில் அதைக் காண்பிப்பவர்களில் உள்ள பிறப்புரிமை மரபணுக்கள் சார்ந்து ஏற்படுகின்ற விடயம் என்றாகினும் தற்போது கோழிகளை வைத்து நடத்திய ஆய்வொன்றில் இருந்து மனிதரில் ஒவ்வாமைக்கு IgE எனப்படும் நிர்ப்பீடணத்துக்குரிய குளோபியுலின் புரதங்களில் E வகைப் புரதங்கள் (Immunoglobulin E) காரணமாக உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோழிகளில் IgE காணப்படுவதில்லை. மாறாக அதன் கூர்ப்படையாத ஆதியான நிலைக்குரிய IgY மூலக்கூறே காணப்படுகிறது. அது ஒவ்வாமை ஏற்படுத்தும் வகையில் குருதியில் உள்ள வெண் குருதிக் கலங்களோடு (white blood cells) இறுகப் பிணைவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மனிதரில் உள்ள IgE வெண் குருதிக் கலங்கலோடு இறுகப் பிணைந்து ஒவ்வாமை ஏற்பட வழிவகுக்கிறது.

எதிர்காலத்தில் இந்த IgE கள் ஒவ்வாமைக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெண் குருதிக் கலங்களோடு இறுகப் பிணைவதை தடுக்கும் அல்லது பிணைந்ததை உடனடியாக விடுவிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து விட்டால் மனிதரில் ஒவ்வாமைப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிட்ட வாய்ப்புக் கிடைக்கும் என்று இது குறித்த ஆய்வை மேற்கொண்ட King's College London ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

IgE க்கள் பாலூட்டிகளில் பக்ரீரியாத் தொற்றுக்களுக்கு எதிராக என்று IgY போன்ற ஆதியான மூலக்கூறுகளில் இருந்து கூர்ப்படைந்திருக்க வேண்டும் என்று கருதும் ஆய்வாளர்கள் அவை மகரந்தம் மற்றும் நிலக்கடலை போன்றவற்றில் உள்ள சில கூறுகளுக்கு எதிராகவும் அதிகம் தூண்டப்பட்டு அவற்றுக்கு எதிராக ஒவ்வாமைத் தாக்கத்தை உடலில் நிகழ்கின்றன என்றும் கருத்துரைத்துள்ளனர்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:19 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க