Wednesday, July 16, 2008

தாயின் உடல் நிறை அதிகரிப்பு குழந்தைகளை பாதிக்கும்.



கருவுற்றிருக்கும் தாய்மார் அதிக உடற்பருமன் அல்லது உடல்நிறை அல்லது Obesity உள்ளவர்களாக இருப்பின் அவர்களின் கருப்பையில் நிகழும் இரசாயன மாற்றங்களுக்கு ஏற்ப குழந்தையும் அதிக உடற்பருமன் உள்ளதாக எதிர்காலத்தில் உருவாகக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமெரிக்காவில் எலிகளிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

உடற்பருமன் அதிகரிக்கும் வகையில் உணவூட்டப்பட்ட எலிகளின் அடுத்து வந்த சந்ததிகள் கூடிய உடற்பருமன் உள்ளனவாகக் காணப்பட, மட்டுப்படுத்திய உணவூட்டலுடன் (விசேடமாக விற்றமின்கள் மற்றும் folic acid சேர்க்கப்பட்ட உணவுகள் கொண்டு) வளர்க்கப்பட்ட எலிகளின் அடுத்து வந்த சந்ததிகளில் இந்தத் தன்மை இல்லாது இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

உடற்பருமன் அதிகம் உள்ள தாயின் கருப்பையில் சிசு வளரும் போதே அதன் மூளையில் பசியைத் தூண்டத்தக்க தொழிற்பாட்டுடன் கூடிய பகுதியின் விருத்தியுடன் சம்பந்தப்பட்ட ஜீன்களின் செயற்பாடு அதிகம் தூண்டச் செய்யப்படுவதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர். இருப்பினும் இது தொடர்பான முழுமையான விளக்கத்தை இன்னும் விஞ்ஞானிகளால் கொடுக்க முடியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குழந்தை ஒன்று கருப்பையில் வளரும் போது அது சந்திக்கும் தாயின் கருப்பையில் நிலவும் இரசாயனச் சூழலுக்கு ஏற்ப அதன் எதிர்கால உடலாரோக்கியம் தீர்மானிக்கப்படுவதாக இதன் மூலம் ஊகிக்கக் கூடியதாக இருப்பதாக விஞ்ஞானிகள் மேலும் கருத்துப் பகர்ந்துள்ளனர்.



புற்றுநோய் தாக்கம் கண்ட சதையச் சுரப்பியின் சிறிய பகுதி. சதையச் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் அது முற்றிய நிலையிலேயே அதிகம் கண்டறியப்படுகிறது.

இதற்கிடையே பிறிதொரு ஆய்வில், அதிகளவு உடற்பருமன் உள்ள பெண்களில் குறிப்பாக மாதவிடாய் நின்ற பருவத்தை அடைந்த பெண்களில் வயிற்றுப் பகுதியில் அதிகம் (70%) கொழுப்பு அல்லது உடல் நிறை சேர்வதால் சதையச் சுரப்பி (Pancreas - குருதியில் இரத்தத்தின் அளவை சீராக்க உதவும் இன்சுலின் எனும் ஓமோனைச் சுரக்கும் சுரப்பி) சார்ந்த புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர்.

எனவே பெண்களோ ஆண்களோ உடற்பருமன் அல்லது உடல் நிறை அதிகரிக்காத வகைக்கு தங்கள் உடலாரோக்கியத்தையும் உணவுப் பழக்கத்தையும் கைக் கொண்டிருப்பது அவர்களுக்கு மட்டுமன்றி அவர்களின் எதிர்கால சந்ததிக்கும் நன்மையாக அமையும்.

மேலதிக தகவல் இங்கு - ஆய்வு 1

மேலதிக தகவல் இங்கு - ஆய்வு 2

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 12:26 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<<முகப்புக்குச் செல்க