Monday, October 20, 2008

நிலவை நோக்கிய இந்தியப் பயணம் ஆரம்பம்.



வரும் புதன்கிழமை (22-10-2008) நிலவுக்கு செலுத்தப்படவுள்ள இந்திய ராக்கெட்டுக்கான கவுன்ட்-டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.

இந்த 52 மணி நேர கவுண்ட்-டவுனின் இறுதியில் புதன்கிழமை 1,380 கிலோ எடையுள்ள சந்தராயன்-1 என்ற விண்கலத்துடன் பிஎஸ்எல்வி-சி 11 ராக்கெட் விண்ணில் பாயும்.

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து இந்த ராக்கெட் செலுத்தப்படவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளுடன் விண்வெளி மையம் தயார் நிலையில் உள்ளது.

வானிலையில் திடீர் மாற்றங்கள் ஏதும் இல்லாவிட்டால் திட்டமிட்டபடி புதன்கிழமை பிஎஸ்எல்வி தனது நிலவுப் பயணத்தைத் துவக்கும்.

பூமியிலிருந்து 250 கி.மீ தூரத்தை அடைந்தவுடன் சந்த்ராயன் விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரியும். பி்ன்னர் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பிக்கும்.

நீள்வட்டப் பாதை என்பதால் இந்த விண்கலத்துக்கும் பூமியிலிருந்து இடையிலான குறைந்தபட்ச தூரம் (perigee) 250 கி.மீயாகவும் அதிகபட்ச தூரம் (apogee) 23,000 கிமீ ஆகவும் இருக்கும்.

இதையடுத்து சந்த்ராயன் விண்கலத்தில் உள்ள சிறிய ராக்கெட்டுகளை இயக்கி அதை பூமிலிருந்து மேலும் தூரத்துக்கு தள்ளுவர் விஞ்ஞானிகள். இந்த ராக்கெட்டுகள் தரைக்கட்டுப்பாட்டு நிலையம் மூலமாக, ரேடியோ சிக்னல்கள் மூலம் இயக்கப்படும்.

ராக்கெட்டுகள் இயங்க இயங்க ஒரு கட்டத்தில் இந்த விண்கலத்துக்கும் பூமிக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 37,000 கி.மீயாகவும் அதிகபட்ச தூரம் 73,000 கி.மீயாகவும் அதிகரிக்கும்.

மேலும் ராக்கெட்டுகளை இயக்கி இயக்கி இதன் சுற்றுப்பாதை பூமியிலிருந்து 3,87,000 கி.மீயாக உயர்த்தப்படும். இவையெல்லாம் 11 நாட்களில் நடந்து முடியும். இந்த 3,87,000 கி.மீ. உயரத்தை அடைந்தபின் சந்த்ராயன் விண்கலம் பூமியை ஒரு முழு சுற்று சுற்றி முடிக்கும்.

இரண்டாவதாக பூமியை சுற்ற ஆரம்பிக்கும்போது, நிலவின் வட புலத்துக்கு சில நூறு கி.மீ. தூரத்தை சந்த்ராயன் அடைந்திருக்கும்.

அப்போது சந்த்ராயனை நிலவின் ஈர்ப்பு விசை இழுக்க ஆரம்பிக்கும். நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சந்த்ராயன் விண்கலம் நுழைந்துவிட்டால், அது நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பித்துவிடும்.

நிலவின் சுற்றுப் பாதையில் நிலவை 100 கிமீ உயரத்தில் வட்டமிட ஆரம்பிக்கும் சந்த்ராயன். அந்த உயரத்தில் பறந்தபடியே நிலவை ஆராயும்.

பின்னர் சந்த்ராயன் விண்கலத்திலிருந்து ஒரு துணை விண்கலம் (Moon Impact Probe) நிலவுக்குள் இறங்கும். இறங்கும்போது நிலவின் வளி மண்டலத்தையும் தரையிறங்கிய பின் அதன் மண்ணையும் இந்த விண்கலம் ஆய்வு செய்து சந்த்ராயன் விண்கலத்துக்கு தகவல் தரும், அந்தத் தகவலை சந்த்ராயன் வாங்கி பூமிக்கு அனுப்பும்.

இந்த ஆராய்ச்சிகள் சுமார் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

சந்த்ராயன் விண்கலத்தையும் Moon Impact Probe கலத்தையும் ரேடியோ சிக்னல்கள் மூலம் கட்டுப்படுத்தவும், இதிலிருந்து வரும் சி்க்னல்களைப் பெறவும் பெங்களூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் பயாலு என்ற கிராமத்தில் மாபெரும் ஆண்டனொவையும் கட்டுப்பாட்டு நிலையத்தையும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அமைத்துள்ளது.

தமிழில் தற்ஸ்தமிழ்.கொம்

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 1:27 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க