Friday, April 03, 2009

மரபணு மாற்ற வைரஸ் மின் கலம் - (Virus battery)



காபன் நனோ குழாயில் தன்னை பதித்துக் கொள்ளும் வைரஸ்.

மின் கலங்கள் எனப்படும் பற்றரிகள் மின் உபகரணங்களை இயக்குவதில் உலகில் என்றுமே முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.

இன்றைய உலகில் பாவித்துவிட்டு எறியும் ஆபத்தான கூறுகளைக் கொண்ட இரசாயன மின் கலங்களில் இருந்து மீண்டும் மீண்டும் மின்னேற்றிப் பாவிக்கும் மின் கலங்கள் வரை உருவாக்கம் பெற்றுள்ளன.

இருப்பினும் அதி நவீன தொழில்நுட்ப முறைகளான மரபணு மாற்றம் மற்றும் காபன் நனோ குழாய்களின் பாவனை ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட பக்ரீரிய விழுங்கி எனப்படும் மனிதரில் ஆபத்தை தோற்றுவிக்காத வைரஸ் நுண்ணங்கியைப் பயன்படுத்தி, ஒப்பீட்டளவில் நீடித்து உழைக்கக் கூடிய மின் கலங்களை தயாரிக்கும் உக்திகளைக் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவில் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள்.

இந்த வகை மின் கலங்களில் இதுவரை 100 தடவைகள் மீள மின்னேற்றிப் பாவிக்கக் கூடிய மின் கலங்களையே தயாரித்துள்ளனர். இருப்பினும் இதன் பயன்பாட்டுக் காலத்தை இதை விட பல மடங்கு அதிகரிக்க முடியும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். அதற்கு முதலில் பாவிக்கப்படும் மூலப்பொருட்களில் சரியானவற்றை தெரிவு செய்ய வேண்டிய தேவை இருப்பதாகக் கூறுகின்றனர்.

இந்த வகை மின் கல தயாரிப்புத் தொழில்நுட்பத்தில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட வைரஸ் நுண்ணங்கிகளை காபன் நனோ குழாய்களில் வளர்த்தெடுத்து நேர் மற்றும் மறை ஏற்றமுள்ள (Charge) முனைகளை உருவாக்கி மின்னேற்றம் செய்யக் கூடிய குறுகிய மின் சுற்றுக்களை உருவாக்குகின்றனர். இந்த வைரஸுக்கள் ஏற்றமுள்ளவையாக கோபோல்ட் ஒக்சைட் மற்றும் பொன் ஆகியவற்றை பதிக்கும் வல்லமை கொண்டவையாக மரபணு மாற்றம் மூலம் உருவாக்கப்படுகின்றன.

இன்றைய பற்றரிகளைப் போல நாளை வைரஸ் பற்றரியும் எம்மத்தியில் பிரபல்யமாக விளங்கும் வகைக்கு இத் தொழில்நுட்பம் முன்னேறும் காலம் அதிக தூரமில்லை என்பதாகவே ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் விளங்குகின்றன. மேலும் இவை கார் போன்ற வாகனங்களை இயக்கும் அளவுக்கு சக்தி வழங்கக் கூடிய வகைக்கு உருவாக்கப்பட முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வைரஸ் உயிரியல் அடிப்படை மின் கலங்கள் சுற்றுச்சுழலுக்கு ஆபத்தான கூறுகளை உருவாக்க மாட்டாத சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான மின் கலங்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகின்றன.

மேலதிக தகவல்கள் இணைப்பு 1

இணைப்பு 2

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 5:24 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க