Saturday, June 06, 2009

மிதக்கும் காற்றாலை மின்பிறப்பாக்கிகள் உதயம்.



அதிகரித்து வரும் மின் சக்தியின் தேவையை ஈடுகட்டவும், பாரம்பரிய வகையில் மற்றும் நடைமுறையில் இருக்கும் மின்சாரத்தை பிறப்பிக்கப் பயன்படுத்தப்பட்டு வரும் வழிமுறைகள் மூலமாக ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை குறைக்கும் நோக்கோடும் புதிய மற்றும் சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் மீளக் கூடிய வளங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது உலகில் பெரிதும் ஊக்கிவிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் உலகிலேயே முதன் முறையாக கடலில் மிதந்து கொண்டு அங்கு வீசும் காற்றின் இயக்க சக்தியை மின்சக்தியாக மாற்றவல்ல காற்றாலை மின்பிறப்பாக்கிகள் நோர்வோ நாட்டின் கடற்கரையில் பணியில் அமர்த்தப்பட இருக்கின்றன.

Hywind என்று அழைக்கப்படும் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை மின்பிறப்பாக்கி 2.3 மெகா வாட் மின்வலுவைப் பிறப்பிக்கக் கூடியதாக அமைக்கப்பட இருக்கிறது. Siemens நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டுள்ள இந்த காற்றாலை மின்பிறப்பாக்கிகள் நோர்வே நாட்டின் கரையோரங்களை அண்டிய கடலில் இரண்டு ஆண்டுகளுக்கு சோதனை முறையில் இயக்கப்பட்டு அவற்றின் பயன்பாடுகள் எதிர்பார்க்கப்பட்ட அளவில் பெறப்படின் மேற்படி காற்றாலைகள் வட அமெரிக்கக் கரையோரங்கள் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் கரையோரங்களிலும் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் இந்தக் காற்றாலைகளை அமைப்பது நிரந்தர காற்றாலைகளை அமைப்பதை விட செலவு கூடியதாக இருப்பினும் பின்னர் இந்த நிலை மாறிவிடும் என்றும் அதுமட்டுமன்றி இவை கூடிய வினைத்திறன் உள்ளனவாக இருக்கும் என்றும் கூறுகின்றனர் இத்திட்டத்தை செயற்படுத்தும் வல்லுனர்கள்.

சுவட்டு மற்றும் அணுக்கரு மின்பிறப்பாக்கிகளின் பாவனை எதிர்காலத்தில் நெருக்கடிகளை சந்திக்க அதிக வாய்ப்புக்கள் உருவாகியுள்ள இவ்வேளையில் மேற்குலக நாடுகள் துரித கதியில் சக்தித் தேவைக்கான பிரதியீட்டு முறைகளைக் கண்டறிவதில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆசிய மற்றும் ஆபிரிக்கப் பிராந்திய நாடுகள் இன்னும் பாரம்பரிய மற்றும் சுவட்டு எரிபொருட்களையும் அணுசக்தியையுமே அதிகம் மின்பிறப்பாக்கலுக்கு பயன்படுத்தி வருகின்றன.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:44 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க