Sunday, July 12, 2009

விண்வெளியில் அகலக் கண் திறந்திருக்கும் கேர்சளின் அசத்த வைக்கும் அதிசயங்கள்.



//கேர்சள் விண் தொலைநோக்கி.//

விண்வெளி ஆராய்ச்சியில் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வரும் அமெரிக்க நாசாவுக்குப் போட்டியாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ESA) களமிறங்கி இருக்கிறது. அதன் விளைவாக விண்வெளி ஆராய்ச்சியில் இவ்வளவு காலமும் நாசாவின் கபிள் (Hubble) விண் தொலைநோக்கி கண்டு சொல்வதே விண்ணியல் ஆய்வில் வேதமாக இருந்து வந்தது.

ஆனால் இந்த நடைமுறையை கடந்த (2009) மே திங்கள் 14ம் நாள் விண்ணுக்கு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சொந்தமான இரட்டை விண் தொலைநோக்கிகளான கேர்சள் (Herschel)மற்றும் பிளாங் (Planck) மாற்றி அமைக்க ஆரம்பித்துள்ளன.

இதன் முதற்கட்டமாக பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் விண்வெளியில் இருந்து கொண்டு கேர்சள் தனது கண்களை அகலத் திறந்து ஆய்வுகளை நடத்த ஆரம்பித்திருக்கிறது.



//கேர்சள் அனுப்பி வைத்துள்ள M74 எனப்படும் பூமியில் இருந்து 24 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் Pisces உடுத்தோகுதியில் உள்ள அகிலத்தின் 3 வெவ்வேறு குறும் மின்காந்த அலைகள் சார்ந்த படங்கள். இவை கேர்சளில் உள்ள SPIRE எனப்படும் உபகரணத்தின் உதவி கொண்டு பெறப்பட்டவை.//

கேர்சளின் தொழிற்பாடுகள் இன்னும் பூரணமாக ஆரம்பிக்கப்படாத போதும் கேர்சளில் உள்ள அதிநவீன சாதனங்களின் (HIFI, PACS and SPIRE) பகுதியான தொழிற்பாட்டுடன் கூடிய அதன் ஆரம்பக்கட்ட செயற்பாடுகளின் போது பிடிக்கப்பட்ட விண்ணில் உள்ள சாதாரண ஒளி அலைகளை விட பெரிய அலை நீளமுள்ள மற்றும் குறும் அலை நீளமுள்ள மின்காந்த அலைகள் தொடர்பான படப்படிப்புக்கள் அகிலங்கள் (Galaxies) தொடர்பான மற்றும் நட்சத்திரங்களின் உருவாக்கம் தொடர்பான புதிய தகவல்களை தர ஆரம்பித்துள்ளன.

கேர்சள் பிடித்துத் தந்த படங்களின் பிரகாரம் தூசிகள் அடங்கிய முகில் கூட்டங்களால் நிறைந்து கிடக்கும் சுருளி வடிவ தூர அகிலம் ஒன்றில் தூசிகளில் இருந்து நட்சத்திரங்கள் பிறப்பெடுப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இது ஒரு சக்கரச் சுழற்சியாக மீள மீள நிகழ்வதாகவும் பெறப்பட்ட தரவுகளில் இருந்து ஆய்வாளர்கள் அனுமானித்துள்ளனர்.



இதற்கிடையே கேர்சளின் HIFI உபகரணம் தந்த தரவுகளில் இருந்து உடுத்தொகுதி Cygnus இல் நட்சத்திர பிறப்பின் போது ஏற்றம் கொண்ட காபன், காபனீர் ஒக்சைட் மற்றும் நீராவி போன்ற இரசாயனங்களின் இருப்புக்கான ஒளி காழற் பகுப்புப் படங்கள் (light spectrum) பெறப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்க நாசாவின் கபிள் சாதாரண ஒளி அலைகளுக்குரிய விண்வெளி நிகழ்வுகளை கூறுகளையே படம் பிடிக்கும் தகுதியுடையது. ஆனால் கேர்சள் அதை விட அதிக அலை நீளமுள்ள மற்றும் பல்வேறுபட்ட அலை நீளமுள்ள வேறு மின்காந்தக் கதிர்ப்புக்களையும் உள்வாங்கி தரவுகளை பெறக்கூடிய தன்மையுடையதாக பல அதிநவீன உபகரணங்கள் உள்ளடக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.



//கேர்சள் படம்பிடித்த M66 எனப்படும் பூமியில் இருந்து 36 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் Leo உடுத்தொகுயில் உள்ள சுருளி அகிலத்தின் அமைப்பு.//

கேர்சளின் நீண்ட ஆராய்ச்சிப் பயணத்தில் இந்த அகலக் கண்திறப்பு இப்போ ஆரம்பக்கட்டத்தில் இருந்தாலும் அதற்கென தீர்மானிக்கப்பட்டுள்ள ஆயுள் காலமான 2013 க்குள் அது விண்வெளி பற்றிய பல வியத்தகு விடயங்களை பூமிக்கு தந்துதவும் என்று ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விண்ணியலாளர்கள் நம்புகின்றனர்.

கேர்சளின் செயற்பாடுகள் விண்வெளி பற்றிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இருக்கும் என்று பிற விஞ்ஞானிகளும் நம்புகின்றனர்.

கேர்சளின் மற்றும் பிளாங்கின் செயற்பாடுகள் தொடர்ந்து வெற்றிகரமாக அமைந்து அவை விண்வெளி அறிவியலுக்கு புத்தூட்டம் வழங்குவதை சாதாரண மக்களாகிய நாமும் வரவேற்கின்றோம்.



//கேர்சள் அனுப்பிய படங்களின் தொகுப்பு. இதில் கீழ் இடப்பகுதியில் Cat's Eye Nebula பற்றிய முப்பரிமானப்படங்கள் அடங்கி இருக்கின்றன. image: http://sci.esa.int//

மேலதிக படங்களும் விபரங்களும் இங்கு. (படங்கள் தகவல் bbc.co.uk மற்றும் sci.esa.int/science-e)

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 6:23 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க