Monday, July 13, 2009

தேன் நிலவு கொண்டாடும் தவளைகள்.



மனிதர்கள் திருமணத்திற்குப் பின்னர் தேன் நிலவைக் கொண்டாடுவார்கள். தேன் நிலவின் பின்னர் பொதுவாக பெண்கள் கருத்தரிக்கின்றனர் என்பதால் அங்கு முக்கியமாக என்ன நிகழ்கின்றது என்பதை முற்று முழுதாக விபரிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் அது இலகுவாக விளங்கும் என்று கருதுகின்றோம்.

மனிதர்களின் தேன் நிலவில்.. நிலவு என்ற சொல் இருந்தாலும் அதற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராகத்தான் இன்னும் இருக்கிறது.

ஆனால் இது கொஞ்சம் மாறுபட்ட செய்தி. இங்கு தேன் நிலவை கொண்டாடுவது தவளைகள்.

ஆம் தவளைகள் தமது புணர்ச்சிக்கான காலமாக முழு நிலா வானில் தோன்றும் நாளைத்தானாம் தெரிவு செய்கின்றன. நிலா ஒளியில் தான் ஆண், பெண் தவளைகள் கூடி இனப்பெருக்கம் செய்வதற்கான தொழிற்பாட்டில் ஈடுபடுகின்றனவாம். இது உலகலாவிய அளவில் தவளைகளால் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாக உள்ளமை கடந்த 10 ஆண்டுகளாக வெவ்வேறு இடங்களில் அவற்றின் நடத்தைகளை ஆராய்ந்த ஒரு உயிரியல் ஆய்வாளரால் (Rachel Grant) கண்டறியப்பட்டுள்ளது.

தவளைகள் மட்டுமன்றி தேரைகள், newts போன்ற ஈருடக வாழிகளும் (Amphibians) இப்படியான நடத்தைக் கோலத்தைக் கொண்டிருக்கின்றன என்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள்.

தவளைகளின் பரம்பல் பூமியைச் சுற்றிய நிலாவின் சுழற்சியோடு மாறுபடும் இந்தக் கோலம் தவளை அடங்கும் ஈருடக வாழிகள் தொடர்பான பராமரிப்புக்கு அவசியம் என்று கருதுகின்றார்கள் உயிரினப் பாதுகாவலர்கள்.

ஆண்டு தோறும் பல ஆயிரம் தவளைகள் இனப்பெருக்கத்திற்காக நீர்நிலைகளை நாடி வீதிகளைக் கடக்க முயன்று வாகனங்களில் சிக்கி மடிந்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. தவளைகளின் பெருமெடுப்பிலான இடம்பெயர்வுக் காலத்தை இனங்கண்டு வீதித்தடைகளை அமுல்படுத்தி அவற்றை பாதுகாக்க இந்த ஆய்வு உதவும் என்று கருதுகின்றனர்.

மேலும் தவளைகளின் இந்த நடத்தைக் கோலம் தொடர்பில் இன்னும் ஆய்வுகள் விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

தேன் நிலவில் நிலவின் பங்களிப்பு மனிதர்களிடம் தெளிவாக தெரியாத போதும் தவளைகளில் தெளிவாகி இருப்பது..வியப்பளிக்கிறது.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:34 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க