Tuesday, July 21, 2009

ஆசியக் கண்டத்தை இருளாக்கப் போகும் சூரிய கிரகணம்.



//சூரிய கிரணகத்தின் போது அதிக இருளைச் சந்திக்கும் பகுதிகள் இருளடைந்த பட்டி போன்ற தடித்த கோட்டால் காட்டப்பட்டுள்ளது. படம்: nasa.gov//

2009ம் ஆண்டு யூலைத் திங்கள் 22ம் நாள் ஆசியக் கண்டத்தில் நிகழ இருக்கும் முழுச் சூரிய கிரகணத்தால் (Solar eclipse) இந்தியா, பங்காளதேசம், மியன்மார், சீனா போன்ற ஆசிய நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகள் பகல் வேளையில் கடும் இருளைச் சந்திக்கவுள்ளன.

இந்தச் சூரிய கிரகணம் 21ம் நூற்றாண்டின் நீண்ட கிரகணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சூரியன், சந்திரன், பூமி என்று சூரியக் குடும்ப உறுப்பினர்கள் ஓர் நேர் கோட்டில் சந்திக்கும் போது ஏற்படும் சந்திரனின் நிழல் பூமியில் வீழ்வதால் தோன்றுவதே சூரிய கிரகணமாகும்.



இந்தச் சூரிய கிரகணம் மொத்தமாக 6 நிமிடங்கள் 39 விநாடிகள் தொடர இருப்பதாகச் சொல்லப்படுகிறது..

சூரிய கிரகணத்தின் போது தோன்றும் சந்திரனின் கருநிழல் (Umbra) பூமியில் விழும் பகுதிகள் கடும் இருளைச் சந்திக்க அதன் அயனிழல் (Penumbra) பகுதிகள் குறைந்த அளவு இருளைச் சந்திக்க உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சந்திரனின் அயனிழல் பகுதி கருநிழல் பகுதி போன்று ஒடுங்கியதாக அன்றி ஓரளவு பரந்தது என்பதால் ஆசியக் கண்டத்தின் தெற்கு, தென்கிழக்குப் பகுதிகளை அண்டிய இடங்களிலும் பசுபிக் சமுத்திரத்தின் ஒரு பகுதியிலும் கருநிழலின் பாதிப்போடு அயனிழலின் தாக்கமும் உணரப்படும்.



சூரிய கிரகணத்தை மக்கள் வெற்றுக்கண்ணால் நோக்குதல் ஆபத்தான விளைவுகளை கண்ணில் ஏற்படுத்தலாம் என்பதால் அதற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகளை அணிந்து கொண்டு நோக்குதல் நன்று.



// இது போன்ற சூரிய கிரகணத்தைப் பார்க்க என்று விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கண்ணாடி அணிந்தே நோக்க வேண்டும்.படம் மற்றும் கண்ணாடி பற்றிய விபரம் இங்கு.//

சன் கிளாஸ் (Sun class), புகையூட்டிய கண்ணாடிகள் (smoked glass), படச்சுருள்கள் (exposed film) கொண்டு சூரிய கிரகணத்தை நோக்குதல் தவறாகும். இதற்கென தயாரிக்கப்பட்ட மேலே காட்டப்பட்டது போன்ற விசேடித்த கண்ணாடிகள் கொண்டே நோக்குதல் வேண்டும்..!

sources used: nasa.gov, en.upload.wikimedia.org, who.int, rainbowsymphonystore.com

-------------

சூரிய கிரகணக் காட்சிகள் - மேலதிக சேர்க்கை (23-07-2009).

Labels: , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:38 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க