Monday, December 17, 2012

விண்வெளி நோக்கியும் அமெரிக்க போர் வடிவங்கள் விரியப் போகின்றனவா..?!

சோவியத் யூனியனுடனான பனிப் போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத்தும் போட்டி போட்டுக் கொண்டு விண்வெளிப் பயணங்களைச் செய்தன. யார் விண்வெளியில் அதிக காலம் தங்குவது.. புதிய கிரகங்களில் ஆய்வுகளைச் செய்வது.. விண்கலங்களை, மனிதனை வேற்றுக் கிரகங்களுக்கு அனுப்பி வைப்பது மற்றும் விண்வெளியின் ஆழப்பகுதிக்குப் போவது என்ற போட்டிகள் கூட இருந்தன.

இந்தப் போட்டிக் காலத்தில்.. சோவியத் யூனியன் அமெரிக்காவை விட கொஞ்சம் முன்னோடியாகி.. விண்வெளிக்கு முதல் விண்கலத்தை அனுப்பியது  மட்டுமன்றி.. புவி உயிரினம்... மற்றும் மனிதன் என்று பல புவி மேற்ப் பொருட்களை உயிரிகளை விண்ணிற்கு அனுப்பி இருந்ததுடன்.. மிர் என்ற விண் ஆய்வு கூடத்தைக் கட்டி விண்வெளியில் இருந்து கொண்டே ஆய்வுகளையும் செய்து வந்தது.

அன்றைய காலத்தில் அமெரிக்கா இவற்றில் கொஞ்சம் பிந்தங்கி இருந்தாலும்.. சோவியத்துக்குப் போட்டியாக.. தானும் விண்வெளியில் சிறந்தவன் என்று காட்ட நிலாவிற்கு  மனிதப் பயணங்களை மேற்கொண்டது. அதன் பின்னர் அமெரிக்கா விண்ணோட உற்பத்தியில் கவனம் செலுத்தி முன்னேறிக் கொண்டது.

ஆனால் 1990 களில் சோவியத் யூனியன் ரஷ்சியாவாக சிதைந்து போன போது... ரஷ்சியாவின் பொருண்மிய நெருக்கடி அதன் அமெரிக்காவுடனான விண்வெளிப்போட்டியில் அதனைப் பிந்தங்கச் செய்தது. இதனால் சோவியத்தோடு தேவை ஏற்பட்டால் விண் போர் செய்ய அமெரிக்க போட்டிருந்த நட்சத்திரப் போர்த்திட்டம் (star wars) கைவிடப்படும் நிலைக்குப் போனது. இருந்தாலும் ரஷ்சியாவின் விண்வெளி ஆதிக்கம் என்பது சீரானதாகவே இருந்து வருகிறது. அமெரிக்கா போல் விண்வெளியிலும் தானே மேலாதிக்க சக்தி என்ற போட்டியில்  ரஷ்சியா இன்று வெளிப்படையாக இல்லை. அதில் இருந்தும் விலகி விண்வெளியை வைத்து எப்படி காசு பார்ப்பது என்பதிலே தான் ரஷ்சியாவின் கவனம் திரும்பி உள்ளது.

ஆனால் உலகில் போல் விண்வெளியிலும் தானே தனிப்பெரும் மேலாதிக்க சக்தியாக விளங்க வேண்டும்.. என்ற அமெரிக்காவுக்கோ சோதனை என்பது தொடர்ச்சியானது. அந்த வகையில் சீனாவின் அதீத பொருண்மிய வளர்ச்சி என்பது சீனா விண்வெளியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அதனை உந்தித்தள்ளியது. அதனடிப்படையில் சீனா கடந்த சில தசாப்தங்களில் விண்வெளி ஆராய்ச்சியிலும் பயணங்களிலும் பல வெற்றிகளை குறுகிய காலத்தில் ஈட்டிக் கொண்டுள்ளது. தொடர்ந்தும் பல வெற்றிகளை நோக்கி அது பயணிக்கும் நிலையில் உள்ளது. சீனாவுக்குப் போட்டியாக விண்வெளியிலும் களமிறங்கிய இந்தியாவால் சீனாவோடு போட்டி போட முடியவில்லை.

இந்த நிலையில்.. அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளை நோக்கி சீன விண்வெளித் தொழில்நுட்பம் விரியலடைய ஆரம்பித்துள்ளது. அண்மையில் ஈரானும்.. வடகொரியாவும் தாங்களாகவே விண்வெளியில் தமது செய்மதிகளை ஏவி இருந்தனர். இவர்களின் தொழில்நுட்பத்தின் பின்னால் சீனாவின் பங்கு இருந்துள்ளது என்பது வெள்ளிடை மலை ஆகும்.

இந்த இக்கட்டான நிலையில்.. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடும் நிதி நெருக்கடிக்குள் வீழ்ந்து கொண்டுள்ளது. அமெரிக்கப் பொருண்மிய நெருக்கடி நாசாவையும் அதன் எதிர்காலத்திட்டங்களையும் பாதிக்கச் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

Military%20Space%20Plane_Pata.jpg

சும்மா அமைதியாகக் கிடந்த விண்வெளியில் ஒரு மேலாதிக்க போட்டிக்கான போர் பதட்டத்தை ஏற்படுத்தியது மட்டுமன்றி விண்வெளிக் குப்பைகளால் விண்வெளியையே மாசாக்கி விட்டுள்ள அமெரிக்க - சோவியத் விண்வெளி மேலாதிக்கப் போட்டி.. அமெரிக்காவிற்கோ அன்று ஆரம்பித்த அந்தப் போட்டியைக் கைவிட்டு இறங்கிவர முடியாத நிலையையும் தோற்றுவித்துள்ளது .

அமெரிக்கா விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன.. விண்வெளியில் அதன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் இன்று அதற்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்.. அண்மையில் அமெரிக்கா நாசா நிறுவனம்.. விண்வெளிப் பயணங்கள் தொடர்பில் அமெரிக்க தனியார் துறையை சார ஆரம்பித்துள்ளது. அதனால் அமெரிக்க விண்வெளி ஆய்வுகளின் தொழில்நுட்பங்களின் ரகசியத்தன்மை என்பது கேள்விக்குறியாகி உள்ள நிலையில் அமெரிக்க இராணுவம் திடீர் என்று நாசாவின் உதவியுடன் ஆளில்லாத விண்வெளி விமானம் (space plane) ஒன்றை ஏவிப் பரிசோதனை செய்துள்ளது. இதனை அமெரிக்கா ரகசியமாகவே செய்து முடித்துள்ளது.

அமெரிக்க தனியார் துறை ரஷ்சியாவின் "விண்வெளியை வைத்து காசு பார்க்கும்" பொறிமுறைக்கு போட்டியாக இருக்க.. அமெரிக்க இராணுவம் நாசாவோடு கைகோர்த்து விண்வெளியில் சீனாவை கணக்குப் பண்ண ஆரம்பித்துள்ளதன் அறிகுறியாகவே அமெரிக்காவின் தற்போதைய விண்வெளித் திட்ட நகர்வுகள் கட்டியம் கூறி நிற்கின்றன.

அமெரிக்காவின் இந்த விண்வெளி விமானம்.. பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 800 கிலோமீற்றர்கள் வரை விண்வெளியில் ஊடுருவி பயணிக்க மற்றும் செயற்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செய்மதிகளுடனான எதிர்காலப் போர் உக்திகளில் இந்த விமானம் பங்கெடுக்கப் போகிறதா அல்லது சோவியத்துடனான நட்சத்திரப் போர்த்திட்டம் சீனாவுக்கு எதிராக மீள் எழுச்சி பெற்றுள்ளதன் அடையாளமாக இப்பரிசோதனை அமைந்துள்ளதா என்ற கேள்விக்குறிகள் எழுந்துள்ள இன்றைய நிலையில்.. எதிர்காலத்தில் சீனாவும் அமெரிக்காவும் விண்வெளியில் விண்வெளித் தொழில்நுட்பங்களோடு மோதிக்கொள்ளும் நிலை விரைந்து வளர்ந்து வருவதையே இது இனங்காட்டி நிற்கிறது. இதனால் இயற்கையாக உள்ள விண்பொருட்களுக்கு மேலதிகமாக மனிதனின் விண்ணாதிக்கப் போட்டியாலும் பூமி ஆபத்துக்களைச் சந்திக்கும் நிலை பெருக ஆரம்பித்துள்ளது.

மேலதிக இணைப்புக்கள்:

[X-37B US military space plane launches for third flight]

[X-37B spaceplane 'spying on China']

Labels: , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 2:59 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க