Wednesday, May 01, 2013

மருந்துக்குக் கட்டுப்படாத மலேரிய ஒட்டுண்ணி.

130429174421_malaria_mosquito_640x360_sc

[மலேரிய ஒட்டுண்ணி காவும் இரத்தம் குடிக்கும் நுளம்பு.]

கம்போடியாவின் மேற்குப்பகுதியில் உலகில் இதுவரை கண்டறியப்பட்ட மலேரியாவை தோற்றுவிக்கும் ஒட்டுண்ணிகளில் இல்லாத புதுரக மலேரிய ஒட்டுண்ணியை தாங்கள் கண்டறிந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் தாய்லாந்தில் இருக்கும் மஹிடால் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டிருப்பதாக இயற்கை மரபணுவுக்கான மருத்துவ சஞ்சிகையில் கூறப்பட்டிருக்கிறது.
 
தற்போது மலேரியாவை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் இரண்டாம் தலைமுறை மருந்துக்கு பெயர் ஆர்டிமிசினின். இந்த இரண்டாம் தலைமுறை மலேரிய மருந்துக்குக் கூட கட்டுப்படாத புதுரக மலேரிய ஒட்டுண்ணியை கம்போடியாவின் மேற்குப்பகுதிகளில் 2008 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர்.

இந்த புதுரக மலேரியா குறித்து ஆய்வாளர்கள் மேலதிக ஆய்வுகள் மேற்கொண்டிருந்த பின்னணியில் இந்த புதுரக மலேரியா தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியிருப்பதாக தற்போது அறிவித்திருக்கிறார்கள்.

Plasmodium falciparum

[மலேரிய புரட்டோசோவன் வகை ஒட்டுண்ணியும் செங்குருதிக் கலங்களும்.]

“மலேரியாவுக்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் ஒவ்வொன்றாக பலமிழந்து வருவது ஒரு பக்கம்; மறுபக்கம், இந்த மலேரிய ஒட்டுண்ணி மரபணு மாற்றமடைந்து புதியரகமாக உருமாறுகிறது. இவை இரண்டும் சேர்ந்து, மலேரியா மீண்டும் உயிர்கொல்லிநோயாக மாறும் ஆபத்தை இந்த ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்துகிறது,” என்கிறார் இந்த ஆய்வறிக்கையின் தலைவர் மருத்துவர் ஒலிவோ மியாட்டோ.

உலக அளவிலான மலேரிய ஒட்டுண்ணியின் மாதிரிகளை இவர்கள் பரிசோதித்தபோது, கம்போடியாவில் மட்டும் மூன்று வகை புதுரக மலேரிய ஒட்டுண்ணிகளை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

2010 ஆம் ஆண்டில் உலக அளவில் சுமார் 22 கோடிபேருக்கு மலேரிய தொற்று ஏற்பட்டது. இவர்களின் ஆறரை லட்சம்பேர் இறந்துவிட்டனர்.

இந்தியாவில், பொதுசுகாதார பிரச்சனைகளில் ஒன்றாக மலேரியா இன்றும் தொடரும் பின்னணியில், மருந்துக்கு கட்டுப்படாத புதுரக மலேரிய ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கும் செய்தி என்கிறார் தமிழ்நாட்டின் பொதுசுகாதாரத்துறை செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற மருத்துவர் எஸ் இளங்கோ.

நன்றி பிபிசி/தமிழ்

இணைப்பு 1

இணைப்பு 2

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:29 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க