Sunday, March 07, 2021

செப்சிஸும் அம்மாவின் இழப்பும்

உலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது..

செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது.

செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இருந்து மீள உதவலாம். 

குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்.. உடலில் உள்ள சாதாரண பக்ரீரியாக்கள் கூட உடலின் பிறபகுதிகளுக்குள் செல்வதால் கூட இந்த நிலை ஏற்படலாம். குறிப்பாக குடலில் உள்ள பக்ரீரியாக்கள்.. இரத்தத்தை அடைவதால் கூட.. அவை உடலால் அழிக்கப்படாது பல்கிப் பெருகி உடலங்கங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். 

குறிப்பாக வயதானவர்களில்.. (60 வயதினருக்கு மேல்)

நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்..

நாட்பட்ட நோய் கண்டவர்கள்..

தொடர்ந்து படுக்கையில் இருக்கும் வயதானவர்கள்..

நடமாட்டம்.. உடற்பயிற்சி அற்ற நிலையில் வாழ வேண்டி உள்ள வயதானவர்கள்..

நீரிழிவு நோய் கண்டவர்கள்..

தைரொயிட் உட்பட்ட ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள்..

உடற்தசையிழப்பை கண்டு வரும் நோயாளிகள்..

விற்றமின் டி குறைபாடுள்ளவர்கள்..

போதிய உணவின்மை..

போதிய ஊட்டச்சத்தின்மை..

வைத்தியக் கவனிப்பு சரிவரயின்மை..

போதிய சுகாதார வசதிகள் இன்மை..

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழுதல்..

போதிய வைத்திய பரிசோதனைகள் இன்மை..

இப்படி பல காரணிகள் தனித்தோ கூட்டாகவோ.. இந்த செப்ஸிஸ் உருவாக வாய்ப்பளிக்கின்றன. 

 

செப்சிஸ் தாக்கத்தின் பொதுவான அறிகுறிகளாவன..

1.காய்ச்சல்/ குளிரும் காய்ச்சலும்

2. உடற்சோர்வு

3.சிறுநீர் உற்பத்தி குறைவு

4.மயக்க நிலை

5. அதிகரித்த இதயத்துடிப்பு

6. வாந்தி மற்றும் பேதி

7. தோலின் நிறம் வெளிர்ப்படைதல்

8. குறை குருதி அழுத்தம்

சுவாசத்தொற்று எனில்

சளி.. மூச்சு விடுவதில் சிரமம்.. மூச்சடைப்பு இவையும் சேர்ந்து கொள்ளும்..

Sepsis | El Camino Health

 

அம்மாவின் விடயத்தில்..  அவருக்கு தைரொயிட் பிரச்சனை இருந்தது உண்டு. நடமாட்டம் வீட்டுக்குள் மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் தொடர் வைத்திய கண்காணிப்பு.. மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டே வந்தன.

அப்போ எப்படி செப்ஸிஸ் வந்தது.. எப்படி அதனை வைத்தியர் கண்டுபிடிக்கத் தவறினார்..??!

இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தோல் சம்பந்தப்பட்ட சின்னப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக.. காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால்.. இது தொடர்பாக குடும்ப வைத்தியர் வந்து காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.. ஆனால்.. குருதி பரிசோதனையோ.. சிறுநீர் பரிசோதனையோ செய்யவில்லை.

சில நாட்களின் பின் உடல்நிலை தீவிரமாக பாதிப்பட்ட நிலையில்.. அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரைக் காக்க முடியவில்லை.

செப்சிஸ் (Sepsis).. செப்சிஸ் தாக்கம்/ அதிர்சி (Septic shock)  என்பது..

குறிப்பாக.. சுவாச பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும்.. அதற்கு அடுத்த படியாக.. சிறுநீரகத்தை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதயத்தாக்கு ஏற்படும்.. மூளை செயலிழப்பு ஏற்படும். இதில் குருதி நஞ்சாதல்.. என்பது சிறுநீரக பாதிப்பின் விளைவாக ஏற்படுவதோடு.. சிறுநீர் தொற்று.. சிறுநீர் உற்பத்தி அளவு குறைவு என்பன செப்சிஸ் தாக்க விளைவுகளாகின்றன.

குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பக்ரீரியா வகை நுண்ணங்கள் உடலில் தொற்றாகி பெருகுவதால்.. சரியான பகுப்பாய்வுகள் செய்யப்பட்டால் அன்றி சரியான மருந்துகளை கொடுக்க வைத்தியரால் முடியாது.

அந்த வகையில்.. குருதிப் பரிசோதனை மற்றும் Blood culture மற்றும்.. சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் மாதிரியில் இருந்தான Urine culture என்பன செய்யப்படுதல்.. செப்சிஸ் தாக்கத்தினை இலகுவாக ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ளலாம்.

ஆனால்.. இலங்கையில் வைத்தியர்கள்.. Blood culture மற்றும்  Urine culture செய்வதை அரிதாகவே காண முடிகிறது. அதிலும் High Risk நோயாளிகளுக்கு கூட இவற்றை பரிந்துரைப்பதில்லை.

அம்மா விடயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட வேளையில்.. குருதிப் பரிசோதனை.. சிறுநீர் பரிசோதனையுடன் Urine culture மற்றும்  Blood culture செய்யப்பட்டு தொற்றுக்கான நோய்க்காரணி கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் அவரின் வாழ்நாளை நிச்சயம் அதிகரித்திருக்க முடியும்.

அதைவிடுத்து.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்ற பின்.. பரிசோதனைகளையும்.. கண்காணிப்பையும் செய்வதால் மட்டும் High Risk நோயாளிகளை பாதுகாக்கலாம் என்பது சரியான வழிமுறையாக தெரியவில்லை.

உலகில் எங்கு என்றாலும் செப்சிஸ் மரணங்கள் வயதானவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில்..  இந்த அனுபவப் பகிர்வு உங்களுக்கும் உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்கிறோம்.

தீவிரமான உடற்தொற்று கண்டால்.. நிச்சயமாக உங்கள் வைத்தியர்.. குருதி.. சிறுநீர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக.. Urine culture செய்யச் சொல்லி கோருவது.. தேவை எனின் Blood culture செய்யச் சொல்லிக் கோருவது சரியான நோயாக்கியை கண்டறியவும் சரியான மருந்துகளை கன்டறிந்து.. தெரிவு செய்து வழங்கவும்.. உதவும். இது நோயாளிகளின் சடுதியான தேவையற்ற மரணங்களை கட்டுப்படுத்த உதவும். 

உசாத்துணை:

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3956061/

பதிந்தது <-குருவிகள்-> at 12:30 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க