Wednesday, July 08, 2009

உடலுக்கு வெளியில் ஆண் உயிரணுக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை.

மனித ஆணின் உடலுக்கு வெளியில், IVF முறையில் உருவான முளையம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட மூலவுயிர்க்கலங்களைப் பயன்படுத்தி ஆண் உயிரணுக்களை முழுக்க முழுக்க ஆய்வுசாலையில் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் உயிரியற்துறை விஞ்ஞானிகள்.



உலகின் முதல் குளோனிங் செம்மறியாட்டை உருவாக்கிய பிரித்தானிய நியூகாசில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இந்தச் சாதனையையும் படைத்துள்ளனர்.

IVF முறையில் உருவாக்கப்பட்ட முளையத்தில் இருந்து பெறப்பட்ட மூலவுயிர்க்கலங்களை திரவ நைதரசனில் சேமித்து வைத்து பின் அவற்றை சரியான வளர்ப்பூடகத்தில் மனித உடல்வெப்பநிலைக்கு நிகரான வெப்பநிலையை பரிகரிக்கக் கூடிய பரிகரிப்பானில் வைத்து வளர்த்து இந்த ஆய்வுசாலைக்குரிய ஆண் உயிர் அணுக்களை உருவாக்கியுள்ளனர்.

இருந்தாலும் இந்த உயிரணுக்கள் முழுமையான வளர்ச்சியைக் காண்பிப்பதாகக் கருதக் கூடிய அளவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் தெளிவாக இல்லை என்றும் இது இம்முயற்சியில் ஒரு ஆரம்பப்படி நிலை வெற்றியே என்றும் கூறுகின்றனர் பிற விஞ்ஞானிகள்.

இந்த முறையில் ஆண் உயிர் அணுக்களை உருவாக்குவதில் உண்மையில் வெற்றிகிட்டியிருக்குமானால், வாழ்க்கைக் காலத்தில் நச்சு இரசாயனங்களால் அல்லது பிறப்பால் மலட்டுத்தன்மையை பெறும் ஆண்களுக்கு அதனை நீக்கி எதிர்காலத்தில் குழந்தைகளை உருவாக்க வழி பிறக்கலாம் என்று கருதுகின்றனர் இவ்வாய்வு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள்.

உலக சனத்தொகை அபரிமிதமாகப் பெருகி வரும் இன்றைய உலகில், இன்னொரு மூலையில் குழந்தைகள் இல்லாது கவலைகளோடு வாழும் மனிதர்களுக்கும் உயிரியலுக்கும் இந்த ஆய்வு நல்ல பயனளிக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு ஏற்றுக்கொள்ளலாம்.

மேலதிக தகவல் இங்கு.

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:52 am

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க