Wednesday, October 31, 2007

உலகில் அதிக காலம் உயிர் வாழ்ந்த உயிரி.



மிங் எனப் பெயரிடப்பட்டுள்ள சிப்பி

சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் பயனாக மனிதன் உள்ளிட்ட மற்ற உயிரினங்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடிக்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இந்த கடற்சிப்பிக்கு விஞ்ஞானிகள் 'மிங்' பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது, 1602 ஆம் ஆண்டு இந்த சிப்பி கடலில் பிறந்த போது, சீனாவில் ஆட்சியில் இருந்த அரச பரம்பரையின் பெயரை விஞ்ஞானிகள் இந்த சிப்பிக்கு சூட்டியிருக்கிறார்கள்.

இந்த சிப்பி பிறந்தபோது இங்கிலாந்தில் முதலாம் எலிசபெத் பேரரசி ஆட்சி செய்துகொண்டிருந்தார். இலக்கியவாதியான ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். இந்த சிப்பி பிறந்து 40 ஆண்டுகள் கழித்து தான் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பிறந்தார்.

இப்படி உலக வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளை தனது வாழ்நாளில் கண்ட இந்த அதிசய சிப்பி, சுமார் எட்டரை சென்டிமீட்டர் நீளமுள்ள ஓட்டிற்குள் முடங்கியிருந்தது. இந்த சின்னஞ்சிறிய ஓட்டில் இருக்கும் வளையங்களை வைத்து இதன் வயது கணக்கிடப்பட்டிருப்பதாக கூறுகிறார் கடலியல் பேராசிரியர் கிரிஸ் ரிச்சர்ட்சன்.

சிப்பியின் ஓட்டின் மேலிருக்கும் இந்த வருடாந்த வளையங்கள், இதன் வளர்ச்சி பற்றியும், அதற்கு கடலில் கிடைத்த உணவு, கடல் சார் தட்ப வெப்பம் ஆகியவை எப்படி இதன் வளர்ச்சியை பாதித்தது என்பது பற்றியும் அறிவதற்கு உதவியாக இருக்கிறது.

கடலின் கடந்த கால தட்ப வெப்பத்தை மட்டுமல்லாமல், விலங்குகள் நீண்ட காலம் உயிர் வாழ்வது குறித்த ஆராய்ச்சிக்கும் இந்த சிப்பிகள் பயன்படும் என்கிறார் ரிச்சர்ட்சன்.

405 ஆண்டுகள் ஆழ்கடலில் அமைதியாக உயிர்வாழ்ந்த இந்த கடற்சிப்பி, கடந்த வாரம் கடலை விட்டு வெளியில் எடுக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களின் விஞ்ஞானக்கூடத்தில் உயிர்விட்டது.

bbc.tamil

பதிந்தது <-குருவிகள்-> at 11:06 am

2 மறுமொழிகள்:

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) விளம்பியவை...

செய்தி
பிபிசி தமிழில் படித்தேன். அதை ஆராட்சி எனும் பெயரில் கொன்று விட்டார்கள்.

Wed Oct 31, 11:17:00 am GMT  
Blogger kuruvikal விளம்பியவை...

ம்ம்.. எனக்கு கவலையாவே போச்சுது. ஏன் அந்தச் சிப்பியை உயிர் வாழவைத்து ஆராய்ச்சி செய்ய வாய்ப்புக்கள் இருக்க.. கொலை செய்ய வேண்டும் என்ற வினவல் என்னுள் இருக்கிறது.

கடலுயிரிகளை செயற்கையாக ஏற்படுதப்பட்ட தடாகங்களில் விட்டு உயிர் வாழ வைக்க முடியும். அப்படி இருந்து இந்தச் சிப்பி ஏன் அவசர அவசரமாகக் கொல்லப்பட்டது என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது..?!

நன்றி யோகன் உங்கள் கருத்துக்கும் வரவுக்கும்.

Wed Oct 31, 01:21:00 pm GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க