Sunday, January 27, 2008

இன்னும் ஒரு மாதத்தில் உளவுச் செய்மதி ஒன்று பூமியோடு மோதும் அபாயம்.



விண்வெளியில் ஓர் செய்மதி அல்லது செயற்கைக் கோள்.

மனிதனால் பூமி மட்டும் மாசாகவில்லை விண்வெளியும் தான் மாசாகி வருகிறது. விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் மனித உருவாக்கிய செய்மதிகளில் பல பாவனைக்கு உதவாத நிலையில் கைவிடப்பட்ட நிலையில் குப்பைகளாகப் பெருகிக் கிடக்கின்றன. தற்போது அவற்றால் பூமியில் வாழும் மனிதருக்கும் ஆபத்துக்கள் வர ஆரம்பித்துள்ளன.

அமெரிக்காவின் 9,072 kg திணிவுடைய உளவுச் செயற்கைக் கோள் ஒன்று பூமியுடனான அதன் கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில் கிட்டத்தட்ட இன்னும் ஒரு மாத காலத்துள் ( பெப்ரவரி முடிவில் அல்லது மார்ச் ஆரம்பத்தில்) பூமியின் வளிமண்டத்துள் நுழைந்து பூமியோடு மோதக் கூடிய அபாயம் தோன்றியுள்ளது.

இச்செயற்கைக் கோளில் நச்சுத்தன்மையான இரசாயனக் கூறுகள் உள்ளடக்கப்பட்டிருப்பதால் இச்செயற்கைக் கோள் மீதிகள் பூமியில் மோதுகின்ற போது நேரடிப் பெளதீக நிலைப் பாதிப்புக்களுக்கு மேலதிகமாக செயற்கைக் கோள் கொண்டுள்ள இரசாயனக் கூறுகளால் சூழலுக்கும் மனிதருக்கும் ஆபத்து உருவாகும் நிலை தோன்றியுள்ளது.

இச்செயற்கைக் கோளில் ரொக்கெட் எரிபொருளான நிறமற்ற, அமோனியா போன்ற வாசனையுடைய கைறசின் (hydrazine) நிரப்பப்பட்டுள்ளதால் இச் செயற்கைக் கோள் பூமியில் மக்கள் வாழும் பகுதிகளை அண்டி மோதின் அதனுடன் நேரடித் தொடர்பு வைக்கும் மக்களுக்குப் பாதிப்புக்களை உண்டாக்கும் அபாயம் தோன்றியுள்ளது. மனிதருக்கு மட்டுமன்றி பிற உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இது பாதிப்பாக அமையும்.



Mir வளிமண்டலத்துள் நுழையச் செய்யப்பட்டதும்.. வெடித்து எரியும் காட்சி.

இதற்கிடையே இச்செயற்கைக் கோள் பூமியின் வளிமண்டலத்துள் நுழையும் தறுவாயில் அதனை ஏவுகணை கொண்டு தகர்க்க எண்ணியும் உள்ளனர். அப்படித் தகர்க்கும் போது அதன் மீதிகள் வளிமண்டலத்தில் எரிந்தும் போகலாம் எரியாத மீதிகள் பூமியோடு மோதவும் செய்யலாம். அப்போதும் விபத்துக்கள் ஆபத்துக்கள் நிகழ வாய்ப்புள்ளது.

பொதுவாக செயற்கைக் கோள்கள் பூமியின் வளிமண்டலத்துள் நுழைய நேரிட்டால் அவை பூமியின் அகண்ட சமுத்திரங்களுள் விழ வைக்கச் செய்யப்படுவதே அதிக வழமையாகும்.



1979 இல் பூமியில் எங்கும் மோதலாம் என்று மிகவும் சர்ச்சையை உருவாக்கி பின்னர் கடலில் வீழ்ந்த அமெரிக்க ஸ்கைலாப் (Skylab).

இதே போன்று பூமியுடன் மனிதன் உருவாக்கிய செயற்கைக் கோள்கள் மோதும் நிலை 1979 இல் skylab என்ற 78 தொன் திணிவுடைய அமெரிக்க விண் ஆய்வுகூடம் பூமியின் வளிமண்டலத்துள் நுழையும் போதும் (அது பின்னர் சமுத்திரத்தில் விழ வைக்கப்பட்டது), 2002 இல் அமெரிக்க விஞ்ஞானச் செய்மதி ஒன்று வளிமண்டலத்துள் நுழைந்து தூள் தூளாகி Persian Gulf பகுதியில் வீழ்ந்த போதும் தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



ரஷ்சிய மிர் விண்ணாய்வு கூடம்.

ரஷ்சியா அதன் மிர் (Mir) விண்ணாய்வு கூடத்தை பாதுகாப்பான முறையில், முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் பூமியின் வளிமண்டலத்துள் நுழைத்து தென் பசுபிக் கடலில் வீழ்த்தி அழித்தமை இங்கு நினைவு கூறத்தக்கதாகும்.

மேலதிக தகவல் இங்கு.

படங்கள் : en.wikipedia.org

Labels:

பதிந்தது <-குருவிகள்-> at 8:56 am

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous விளம்பியவை...

மீண்டும் ஒரு skylab பீதியா?

Sun Jan 27, 09:46:00 am GMT  

Post a Comment

<<முகப்புக்குச் செல்க