Monday, July 20, 2009

மனிதன் நிலாவில் காலடி பதித்து 40 ஆண்டுகள் பூர்த்தி.



1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 16ம் நாள் Saturn V உந்துவாகனம் மூலம் அப்பலோ 11 விண்கலம் மிசன் கொமாண்டர் நீல் ஆம்ஸ்ரோங் (Neil Alden Armstrong) தலைமையில், கொமாண்ட் மொடியுள் பைலட் மைக்கல் கொலின்ஸ் (Michael Collins) மற்றும் நிலவுக்கான மொடியுள் பைலட் எட்வின் அல்ரின் (Edwin Eugene 'Buzz' Aldrin) ஆகியோரைக் காவிக் கொண்டு நிலவை நோக்கிப் புறப்பட்டது.

கிட்டத்தட்ட 4 நாட்கள் பயணத்தின் பின் 1969 ம் ஆண்டு யூலைத் திங்கள் 20ம் நாள் .. இன்றிலிருந்து சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னால்.. அப்பலோ 11 நிலாவில் தரையிறங்கி நீல் ஆம்ஸ்ரோங் மற்றும் அல்ரின் ஆகியோர் நிலாவில் காலடி எடுத்து வைக்க வழி செய்தது. இதற்கான ஆதார காணொளியை (Video) நாசா அதே தினத்தில் உலகுக்கு வெளியிட்டது.

அதுவே மனிதன் நிலாவில் காலடி பதித்த முதல் நிகழ்வுக்கான ஒளிவடிவ ஆதாரமாகவும் அமைந்திருந்தது.



ஆனால் அன்று நாசா காட்டிய அந்த மனித சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்கான ஒளிப்பதிவை இன்று தொலைத்து நிற்கிறது. இருப்பினும் அதன் பிரதி ஒன்று அமெரிக்க சினிமாத்துறையான கொலிவூட்டிடம் இருப்பது தெரிய வந்துள்ளது.


அண்மையில் (2009 யூன் திங்களில்) நாசா நிலாவை நோக்கிய ஒரு ஆளற்ற விண்கலத்தை
அனுப்பி நிலாவின் மேற்பரப்பைப் படம் பிடித்த போது அப்பலோ 14 நிலாவில் இறங்கிப் பதித்த தடங்களும் அதில் பயணம் செய்த விண்வெளி வீரர்கள் பதித்த கால் தடங்களும் மீள அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாசா சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.



அப்பலோ திட்டத்தின் கீழ் நாசா மொத்தமாக சுமார் 20 நிலாவுக்கான பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்திருப்பினும் அப்பலோ 1 பறக்க முடியாத பயணமாகவே போய் விட்டது.

அப்பலோ 18 தொடக்கம் 20 வரை நாசாவில் நிலவிய நிதி நெருக்கடி காரணமாகவும், விண்ணோட (space shuttle) அபிவிருத்தியில் மற்றும் சோவியத் யூனியனுக்குப் போட்டியாக விண்ணாய்வு மையங்களை (skylab) நிறுவுவதில் செலவீடுகளை அதிகரிக்கும் நோக்கோடும் நாசா இடைநிறுத்திக் கொண்டு விட்டிருந்தது.



நாசாவின் மொத்த அப்பலோ திட்டத்தில் அது அப்பலோ 7 இல் இருந்து 17 வரையான 11 திட்டங்களில் மனிதனை நிலா நோக்கி அனுப்பி இருக்கிறது. ஆனால் அப்பலோ திட்டம் 11,12,14,15,16 மற்றும் 17 ஆகியவை மட்டுமே மனிதனை நிலாவில் இறக்கி ஆய்வுகளை மேற்கொண்ட வெற்றிகரப் பயணங்களாக அமைந்தன.

இடையில் அப்பலோ திட்டம் 13 நிலாவில் மனிதனை இறக்குவதில் தோல்வி கண்டுவிட்டிருந்தது. இருப்பினும் அந்தப் பயணத்தில் ஈடுபட்ட விண்வெளிவீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்கள் பத்திரமாக அப்போது பூமிக்குத் திரும்பியிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மனிதன் நிலாவில் தடம் பதித்ததான நாசாவின் அறிவிப்புக்கள் பொய்யானவை என்றும் அவை திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகள் என்றும் ஒரு சில சாரார் தற்போதும் கூறி வருகின்றனர்.



//நாசாவின் 1969ம் ஆண்டு மற்றும் அதன் பின்னான மனிதன் நிலவில் தரையிறங்கியதான அறிவிப்புக்களை நிராகரிக்கும் காணொளி.//

நாசாவின் நிலவில் மனிதன் என்ற அறிவிப்புக்களை வதந்திகள் எனும் அறிவிப்புக்களை நிராகரிக்கும் வகையிலும் வெளியீடுகள் வந்துள்ளன. இருந்தாலும் இது விடயத்தில் எழுந்த சந்தேகங்கள் இன்னும் பூரணமாக விலக்கப்படவில்லை என்றே கூற வேண்டும்.

எதுஎப்படியோ நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்தது என்பது உண்மையானால் அது மனித சரித்திரத்தில் முக்கியமான ஒரு நிகழ்வு என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.

இதற்கிடையே நாசாவின் நிலவுப் பயணத்தில் பங்கெடுத்து நிலாவில் முதன்முதலில் கால்பதித்த விண்வெளி வீரர்கள் தமது நிலவுப் பயணத்தின் 40 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் போது விடுத்துள்ள செய்தியில் நிலவைத் தாண்டி மனிதன் செவ்வாய்க்குச் செல்வதையே எனி ஊக்குவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்பலோ 11 பயணத்தில் பங்கெடுத்த விண்வெளி வீரர்கள் மூவரையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து அமெரிக்க அதிபர் ஒபாமா நேரில் வாழ்த்தி கெளரவப்படுத்தி இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

(sources used and thanks for them:youtube.com; en.wikipedia.org; news.bbc.co.uk; news.nationalgeographic.com)

Labels: , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 10:03 pm

0 மறுமொழிகள்:

Post a Comment

<<முகப்புக்குச் செல்க